திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்ட மன்ற தொகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ மற்றும் அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 250 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக பசு மாடுகளுக்கு கோ பூஜை செய்து, குத்துவிளக்கு ஏற்றி, செங்கல் அடுப்பில் மண் பானை வைத்து, பொங்கல் பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து கட்டப்பட்டு, பானைகளுக்கு திலகமிட்டு அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கலிட்டனர். இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் இருபுறங்களிலும் கரும்பு, தோரணம் கட்டப்பட்டு பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து விவசாயத்திற்கும், உயிர்களுக்கும் ஆதாரமான சூரிய பகவானுக்கு சூடம் ஏற்றி நன்றி தெரிவிக்கும் ஒரு சூரிய வழிபாடு செய்தனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் எம் எல் ஏ மாணவ, மாணவிகளுடன் சிலம்பம் சுற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:- பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். தமிழர்களின் வீரத்தையும், நன்றி உணர்ச்சியையும் காட்டுகின்ற கலாச்சார விழா. இந்த விழா தமிழகத்தில் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், நன்னிலம் பேரூர் செயலாளர் பக்கிரிசாமி, பேரளம் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன் உள்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.