பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போன்று மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் மாதந் தோறும் முதல் சனிக் கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகராட்சி கிளையின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகராட்சி கிளையின் சார்பில் மதுரை மாநகராட்சி கல்வி அலுவலரை சந்தித்து ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் தலைமைச் செயலாளர் ஆணை யின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டது.
மேலும், மதுரை மாநகராட்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பு கணக்கினை உரிய விதிகளின்படி ஊதியம் இல்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டும் குறைத்து கணக்கீடு செய்ய வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித்துறையில் உள்ளது
போல் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் முகாமை மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி நிர்வாகிகள் ஜோசப் ஜெயசீலன், மாரீஸ்வரி, ஜெய முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எமிமால் ஞான செல்வி, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.