வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் குரு பரிகார ஆலயத்தில் குடமுழுக்கு வருகிற 12-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார ஆலயம் உள்ளது. இவ்வாலயம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு தேர்ச்சி அடையும் நாளில். இவ்வாலயத்தில் குரு பெயர்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குரு பகவானை வழிபட்டு செல்வார்கள். சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி மீண்டும் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது.
இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயத்தில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. ஆலய முழுவதும் புதிதாக மின் ஒயர்கள் மாற்றப்பட்டு புதிய மின்சார உபகரணங்கள் பொருத்தப்பட்டு நவீன மின் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வர், ஏலவார் குழலியம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகள், சாமி சன்னதியில் விமானங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்துள்ளன. இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.18 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதற்காக ஆலயத்தில் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட திரளானோர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய தக்கார் ராமு, செயல் அலுவலர் சூரிய நாராயணன், கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.