சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூர்- தூய்மைப்பணிகளில், நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலேயே முதன்மையானதாகத் திகழ்ந்திட என்எல்சி இந்தியா நிறுவனம் பாடுபடும்!
தூய்மை அரைத்திங்கள்-2024இன், வெகுஜன தூய்மை இயக்கத்தின் போது, அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி அறிவிப்பு…
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நெய்வேலி நகரியத்திலும், அதன் அனைத்து இதர திட்டங்களிலும், சென்னை மண்டல அலுவலகத்திலும் வெகுஜன தூய்மைப் பிரச்சாரத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தியது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, சுரங்கத்துறை இயக்குநர் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன் மற்றும் மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் ஆகியோர் வெகுஜன தூய்மை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர் தூய்மை இயக்கத்தைக் கடைப்பிடிப்பதில் நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலேயே முதன்மையானதாகத் திகழ்ந்திட, என்எல்சிஐஎல் பாடுபடும் என்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், தூய்மை அரைத்திங்கள் நாட்கள் கடைபிடிக்கத் தொடங்கியதிலிருந்து, என்எல்சிஐஎல் அதன் அனைத்து பகுதிகள், அலுவலகங்கள் மற்றும் நகரியங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நெய்வேலி நகரியத்தில், வெகுஜன துப்புரவு இயக்கம், மெயின் பஜாரில் உள்ள பல்வேறு இடங்கள், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
என்எல்சிஐஎல்-ன் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள், பொதுத்துறையில் பணியாற்றும் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை வீரர்கள், நெய்வேலியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இந்த வெகுஜன துப்புரவு இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தூய்மை அரைத்திங்கள் நாட்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது இதர பகுதிகளில் உள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் நெய்வேலியில் உள்ள அலகுகளில் பல்வேறு தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வுப் பேரணிகள், நாடகங்கள், மனித சங்கிலிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தூய்மை இயக்கத்தினையொட்டி என்எல்சிஐஎல் சென்னை மண்டல அலுவலகம் சார்பில், அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா, நிறுவன தகவல் தொடர்புத்துறை & சென்னை மண்டல தலைமை அதிகாரியும், செயல் இயக்குநருமான
கே. பிரபு கிஷோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரக் கல்வி அதிகாரி டாக்டர் டி ஜி ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் எட்வர்ட் எலியட் கடற்கரையில் தூய்மை நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள், பின்னர் பிரிக்கப்பட்டு, அகற்றுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி யிடம் ஒப்படைக்கப்பட்டன.