காஞ்சிபுரத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி
காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள்,தொல்பொருட்கள் மற்றும் ஒலைச்சுவடிகள் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.பள்ளியின் செயலாளர் ஆர்.வித்யாசங்கர் கண்காட்சியை திறந்து வைத்து தொடக்கவுரை ஆற்றினார்.கண்காட்சியில் பழங்கால நாணயங்கள்,எழுத்தாணிகளின் வகைகள், பழங்கால அளவுகோல்கள்,பல்லவர்,சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்து நாணயங்கள்,100க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆகியன இடம் பெற்றிருந்தன.
தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்,தங்கக்காசுகள்,செப்பேடுகள் குறித்தும், தமிழ் ஆசிரியை டி.விஜலட்சுமி எழுத்தாணிகளின் வகைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள். கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள் பலரும் குறிப்புகள் எடுத்துக் கொண்டதுடன் பல்வேறு சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
படவிளக்கம்}பள்ளி மாணவியர்க்கு பழங்காலப் பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கும் தமிழாசிரியை டி.விஜயலட்சுமி மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு