மாநில திமுக சார்பில் 5 தொகுதியில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு !

புதுச்சேரி மாநில திமுக சார்பில், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில், திமுக–வினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில், கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இந்த ஆண்டுக்கான சமத்துவப் பொங்கல் விழாவை, கதிர்காமம், உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி, பாகூர், வில்லியனூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 11–ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கதிர்காமம் தொகுதி திமுக செயலாளர் வடிவேல் ஏற்பாட்டில், மேட்டுப்பாளையம் அய்யப்பன் கோவில் திடலிலும், 12–ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில், பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில் ராஜா நகர்–முத்தமிழ் நகரிலும், 13.ஆம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சார்பில், தொகுதி பொறுப்பாளரும், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளருமான டாக்டர் நித்தீஷ் ஏற்பாட்டில், தட்டாஞ்சாவடி அய்யனார் கோவில் திடலிலும், 14–ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாகூர் தொகுதி திமுக சார்பில், மாநில கழக பொருளாளரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான இரா. செந்தில்குமார் ஏற்பாட்டில் கீழ்பரிக்கல்பட்டு கிராமத்திலும், 14–ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு மாநில கழகம் சார்பில் எனது ஏற்பாட்டில் வில்லியனூர் தென்கோபுர வீதியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

முன்னதாக 11–ஆம் தேதி காலை 09.00 மணிக்கு உருளையன்பேட்டை தொகுதி மற்றும் வில்லியனூர் தொகுதிகளில் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் கோலப்போட்டி விழா நடக்கிறது. மூன்று வகையான கோலப்போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு 14–ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

எனது தலைமையில் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றுகின்ற கிராமிய இசை, திரைப்பட பாடகர் சித்தன் ஜெயமூர்த்தி தலைமையிலான இன்னிசை நிகழ்ச்சி, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மகளிர்கள் பங்கேற்கும் இந்த சமத்துவ பொங்கல் விழாவை, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் தொடங்கி வைத்து, பொங்கல் விழாவில் பங்கேற்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்த விழாவில், திமுக மாநில நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மொழிப்போர் தியாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமத்துவப் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர்கள் இரா.சக்திவேல், க.ர. ஆறுமுகம், பாண்டு அரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோருடன் கழக இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *