தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்,
தஞ்சாவூர், ஜனவரி – 11. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை ஒரு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
பொதுவாக குழந்தைகளுக்கு செய்யப்படும் தண்டுவட அறுவை சிகிச்சையே அதிக சவாலானதாக இருக்கும் நிலையில், இந்தச் சிறுவனுக்கு இருந்த அரிய மரபணு எலும்பு குறைபாடு இந்தச் சிகிச்சையை மேலும் சிக்கலானதாக்கியது.
இச்சிறுவன் ஒரு சிறிய விபத்தில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அவனது மேல் கழுத்து எலும்புகள் விலகின. இதனால் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டு, கை மற்றும் கால்களில் உணர்வும் இயக்கமும் அற்ற நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், அந்தச் சிறுவனுக்கு எலும்புகளின் வளர்ச்சியையும், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியையும், பாதிக்கும் ‘ஸ்பான்டைலோபிபிசீல் டிஸ்ப்ளாசியா கன்ஜெனிட்டா’ எனும் அரிய பிறவி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் அருண்குமார் மற்றும் கவீஸ் ஆகியோர் மேற்கொண்டனர். மயக்க மருந்து நிபுணர்கள் அரிமாணிக்கம் மற்றும் வினோதா தேவி ஆதரவுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய தீவிர சிகிச்சைப் பராமரிப்பை மருத்துவர்கள் ஷோபனா தேவி மற்றும் சிவக்குமார் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.
இது குறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் அருண்குமார் கூறுகையில் “இச்சிறுவன் மீண்டும் நடக்கத்தொடங்குவதற்கு உதவியிருப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். குழந்தைகளுக்கு கழுத்தின் மேல் பகுதியில் மண்டை ஓட்டைத் தாங்கும் எலும்பும், தலை அசைவிற்கு உதவும் எலும்பும் விலகியிருந்தன.
இதனால், மண்டை ஓடு மற்றும் மேல் முதுகெலும்புப் பகுதியை நிலைப்படுத்த ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ‘intraoperative neuro monitoring’ எனும் நவீன கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டது. தண்டுவட அறுவை சிகிச்சை செய்வது சவாலானது அதிலும் இத்தகைய பிறவி மரபணு குறைபாடு உள்ள சிறார்களுக்கு அது இன்னும் கூடுதல் சிக்கலானது.
மயக்க மருந்து நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் அடங்கிய பல்துறை குழுவின் ஒத்துழைப்புடன், நவீன நரம்பியல் இமேஜிங் மற்றும் நரம்பு மண்டல கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த அறுவை சிகிச்சையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் எங்களால் செய்ய முடிந்தது.” என்று அவர் கூறினார்.
குழந்தை நல மருத்துவர் அப்துல் ரஹ்மான் இச்சிறுவனுக்கான சிகிச்சை செயல்பாட்டிலும், குணமடைந்து கைகால் இயக்கத்தை திரும்பப் பெறுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்வின் போது மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் வி. பிரவீன் உடனிருந்தார்.