மோகனூர் ,
தமிழ்நாடு அரசு 2025 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டும் தற்போது வரை அரசாணை வெளியிடவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கு உண்டான கரும்பு அரவைப் பருவம் தொடங்கியுள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மூலம் பழைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3290.50 மட்டும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வில்லை. தமிழகத்தில் உள்ள கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

இதனால் திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்டமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ராஜா பெருமாள், மாநில துணை பொதுச்செயலாளர் கணபதி, மாநில பொருளாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளை சேலம் மாவட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் இயற்கை விவசாயிகள் சங்க மாநில தலைவர் தங்கராஜ், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயராஜ், குப்பண்ண முத்து, சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர். நிறைவாக ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *