ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்கூட்டியே சொரிமுத்தையனார் கோவில் வந்த பக்தர்கள் – திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரர் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கி நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட இருக்கின்றனர்.
இதற்காக வனத்துறையினர் வருகிற 2 -ந் தேதி முதல் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உள்ளனர்.
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் கோவில் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் செல்ல தடைவித்துள்ளனர், இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆலங்குளம் காளத்திமடம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முன்கூட்டியே தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் இன்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வருகை தந்தனர்.
அவர்களை பாபநாசம் வனசாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினார், இதனால் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வன சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 தேதி முதல் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது வருமாறு பக்தர்களை திருப்பி அனுப்பினார். தொடர்ந்து ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பி சென்றனர்..