காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம், ஜன.13: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களுக்கு காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை தலைமை வகித்தார். இதில் அரசுப் பள்ளிகளில் பயின்று, நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, கல்வி பயின்று வரும் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 23 மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொன்னாடை அணிவித்தும், கேடயங்களை வழங்கியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், காங்கயம் நகர்மன்றத் தலைவர் ந.சூரிய பிரகாஷ், நான் முதல்வன் திட்டத்தின் மாவட்ட கருத்தாளர் விஜயகுமார், திமுக கட்சியின் காங்கயம் நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.