தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தைப்பொங்கல், தைப்பூசம் முடிந்து திரும்பிய மக்கள் கூட்டம்.

தாராபுரம் புறவழிச்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்!

5 மணி நேரம் ஊர்ந்த வாகனங்கள்…
10 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசை… போலீசாருக்கு தலைவலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில், இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலங்கியம் சிக்னல், உடுமலை ரவுண்டானா, பழனி சாலை சந்திப்பு, ஒட்டன்சத்திரம் சாலை சந்திப்பு, காங்கேயம் பிரிவு, திருப்பூர் – கோவை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டிராவல்ஸ் பஸ்கள் என அனைத்து வகை வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

வட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர், திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு ஐந்து நாள் விடுமுறை கிடைத்ததால், தேனி, திண்டுக்கல், கரூர், மதுரை, பழனி உள்ளிட்ட ஊர்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர்.
நாளை திங்கள் கிழமை வேலை நாள் என்பதால், அனைவரும் பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, திருப்பூர் நோக்கி திரும்பினர்.

அதே நேரத்தில், ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தைப்பூச திருவிழாவிற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவடி பக்தர்கள் வாகனங்களில் தாராபுரம் சாலை வழியாக பயணம் செய்தனர்.
இதனால் ஒரே நேரத்தில் இரு பெரும் கூட்டங்கள் சந்தித்ததால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

பண்டிகை காலம் முடிந்து, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி போன்ற தொழில் நகரங்களுக்கு தாராபுரம் வழியாக சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும், டிராவல்ஸ் பஸ்களும் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கின.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போக்குவரத்தை சீரமைக்க போலீசார் தீவிரமாக முயன்றும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதனால் தாராபுரம் பகுதியில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த போக்குவரத்து நெரிசலால் தாராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் சாலையில் சிக்கி தவிப்புக்குள்ளானனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *