குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

பெரம்பலூர்.ஜன.21. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் சாதனைகள் படைத்த பெண்களை பாராட்டும் வகையிலும், ”சாதனை மகள்களுக்கு பாராட்டுவிழா” என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக குழந்தைத் திருமணம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள பெற்றோருக்கும், மாணவ -மாணவிகளுக்கும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில்,
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP) திட்டத்தின் கீழ் ”சாதனை மகள்களுக்கு பாராட்டு விழா” என்ற தலைப்பில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது-

18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு நடத்தப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்களாகவே கருதப்படும். அந்தக்குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவதால் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற புரிதல் அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும். கல்வி ஒன்றுதான் யாரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத சொத்து என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் மிதிவண்டி வழங்கும் திட்டம் என திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் குழந்தைகளின் கல்வியை மையப்படுத்தியே செயல்படுத்தப்படுகின்றது. இதன் காரணம் அனைவரும் இடைநிற்றலின்றி கல்வி கற்க வேண்டும் என்பதே ஆகும்.
மாணவ, மாணவியர்கள் படிக்கும் வயதில், திருமணத்தை தவிர்த்தல் வேண்டும். கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்வது நல்லது. படிப்பை மட்டுமே முதன்மையாக நினைத்து படிக்க வேண்டும்.

வறுமையின் காரணமாக மாணவ, மாணவிகள் மேல் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறைந்தது ஒரு பட்டப் படிப்பையாவது படிக்க வைக்க வேண்டும். குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கும் காலம் இது. உங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், உயர்கல்வியில் சாதித்த மாணவிகளுக்கும் விருது வழங்கப்படுவதற்கு காரணம் உங்கள் அனைவராலும் இதுபோல் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியும் என்பதை விளக்குவதற்காகத்தான். உங்கள் பகுதியில் யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் வந்தாலோ, உடனடியாக 1098 என்ற எண்ணிற்கும், இலவச சட்ட ஆலோசைனைக்கு 15100 என்ற எண்ணிற்கும், பெண்களுக்கு நடைபெறும் வன்கொடுமைகள் குறத்து 181 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவை அனைத்தும் கட்டணமில்லா தொலைபேசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பெற்றோரும், மாணவ மாணவிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விழாவில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பெண் மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவிகள், உயர்கல்வியில் மருத்துவம் போன்ற படிப்புகளை தொடரும் மாணவிகள், நன்றாக படித்து பணிக்குச் சென்ற பெண்கள், சமூக சேவை செய்து வரும் பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் பெண் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பெற்றோர் என 36 நபர்களுக்கு பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெற்ற கிராமங்களில், அமைக்கப்பட்டுள்ள கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுவின் மூலம் பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிப்பது, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி பயில்வதை உறுதி செய்வது மற்றும் வளரிளம் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் இனிவரும் காலங்களில் குழந்தை திருமணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி வழங்கப்பட்டு மாணவிகளின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று மீள பெறப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், “குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பத்தால் வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்” குறித்து மகப்பேறு மருத்துவர் அபர்ணா அவர்களும், குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து மாவட் சட்ட ஆலோசனை மைய பாதுகாப்பு அலுவலர் வழக்கறிஞர் திருஞானம் அவர்களும் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். ஸ்ரீவேலாயுதனார் கலைக்குழுவின் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது,
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *