பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற பூமி பூஜை : நான்கு மாதங்களில் அகற்ற இலக்கு: பாதுகாப்பாக அகற்ற முன் ஏற்பாடுகள் தீவிரம்:

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற பூமி பூஜை நடைபெற்றது. பழைய ரயில் பாலம் மிக வரலாற்று சிறப்புமிக்கது என்பதால் அதனை பாதுகாப்பாக அகற்றுவதற்கு முன் ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதில் 1914-ல் பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்தியாவில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலமாகும் இந்தப் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும். இந்தப் பாலம் 1964-ம் ஆண்டு புயலில் சேதமடைந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நூறாண்டுகளை கடந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் பழைய பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) என்ற ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு நிறுவனம் பாம்பன் பழைய பாலத்தை அகற்ற ஒப்பந்தம் கோரி டெண்டர் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் 2.3 கி.மீ நீளம் கொண்ட இப்பாலத்தில் நடுவில் உள்ள தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ. 2.53 கோடியில் அகற்ற கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெண்டர் வழங்கப்பட்டு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற பூமி பூஜை நடைபெற்றது. 4 மாதத்தில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலம் வரலாற்று சிறப்புமிக்க பாலம் என்பதால் அதனை அகற்றும் போது சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக பழைய ரயில் பாலத்தை அடுக்கடுக்காக வெட்டி எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்காக எண் ஒன்றில் இருந்து வரிசை படியாக பாலம் முழுவதும
எழுதப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் படிப்படியாக ரயில் பாலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

111 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்றி, ரயில் அருங்காட்சியத்தில் வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *