பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

  பெரம்பலூர்.ஜன.23.      இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அதனடிப்படையில் இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளர் தினம் 25.01.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில்  தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் உருவான தினமான ஜனவரி 25ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவித்தல், புதியதாக தகுதிப் பெற்ற இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவையாகும். அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனடிப்படையில் ரோவர் கல்லூரி குழுமங்களைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளும், ராமகிருஷ்ணா கல்லூரி குழுமங்களைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளும், தனலட்சுமி கல்லூரி குழுமங்களைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகளும், என மொத்தம் சுமார் 1,100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்கள்.

ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கிய இப்பேரணி சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. பேரணியின்போது, மாணவ,மாணவிகள் நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது சிறந்தது நான் நிச்சயம் வாக்களிப்பேன், எனது இந்தியா எனது எனது பாரதம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பேரணி முடிவுற்ற நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க பேரணியில் கலந்துகொண்ட இளம் வாக்காளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதேபோல, குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் பேருந்து நிலையத்தில், வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அருளானந்தம், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *