ATM கொள்ளையர்களை பிடிக்கும் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவல் துறையினரை மேற்கு மண்டல ஐ.ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

கேரளா மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம்களில் கடந்த 27-ம் தேதி கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரி மூலம் 7 வடமாநில கொள்ளையர்கள் தப்பி சென்ற போது நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ஹரியானா மாநிலம் பிலால் மாவட்டத்தை சேர்ந்த ஜூமாந்தீன்(37) என்பவரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் மற்றொரு கொள்ளையன் அஜார் அலியை கால்களிலும் சுட்டதில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொள்ளையர்களிடம் இருந்து சுமார் 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நேற்று இரவு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொள்ளையன் ஜூமாந்தின் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணிக்கு மார்பு பகுதியிலும் மல்லசமுத்திரம் உதவி காவல் ரஞ்சித் -க்கு கையிலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சூழலில், படுகாயம் அடைந்தவர்களை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் இன்று நலம் விசாரிக்க நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

நாளை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நாமக்கல் வருகை தர உள்ளதாகவும், அவர் காயமடைந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரை நலம் விசாரிக்க உள்ளார் எனவும் மேற்கு மண்டல் ஐ.ஜி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *