நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும்,மீன் வளர்ப்பினை பாதுகாத்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலைத்துறைக்கு சொந்தமான குளங்கள்,கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
இவை நீங்களாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் மூலம்நூறு சதவீத மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும்,மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 60 நாட்களைக் கடந்த நிலையில்,வலங்கைமான் தாலுக்காவில் சுமார் 20 சதவீத அளவிற்கு குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளது.கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை முன்கூட்டியே நிறுத்தப்பட்ட நிலையில் பல குளங்கள் தண்ணீர் நிரம்ப வில்லை. சில இடங்களில் வடகிழக்கு பருவ மழைக்கு பின்னரே குளங்கள் நிரம்பி வழக்கத்திற்கு முன்னதாகவே தண்ணீர் இன்றி வற்றி விட்டது.
இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு மீன் வளர்ப்பும் பாதிப்படைந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதியினை ஒதுக்கி நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து, வலங்கைமான் தாலுகாவில் உள்ள கிராம ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.