கோவை
கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்த‘க்ராணி’ படக்குழுவினர் – ரசிகர் வரவேற்பால் உற்சாகம்…
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘க்ராணி’ திரைப்படத்தின் படக்குழுவினர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலுக்கு நேரில் வந்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும்ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் விஜயகுமார் மற்றும் படக்குழுவினர், இந்த திரைப்படம் முழுமையாக குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.சிறுவயதில் நாம் கேட்ட அம்புலி மாமா கதைகளின் அடிப்படையில், குழந்தைகள் ரசிக்கும் வகையிலும்,குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படியாகவும் ‘க்ராணி’ திரைப்படம் அமைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
படத்தில் இடம்பெறும் வடிவுக்கரசி கதாபாத்திரம் மிகுந்த சவாலானதாக இருந்ததாகவும், அந்த கதாபாத்திரம் திரையில் தோன்றும் போதெல்லாம் ரசிகர்கள் கைத்தட்டி வரவேற்கும் காட்சி தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், படத்தின் வசனங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும் கூறினர்.
படத்தின் வெற்றிக்கு இசையும் ஒளிப்பதிவும் மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்தார். குறிப்பாக, படத்தின் கதை சொல்லல், பின்னணி இசை மற்றும் காட்சிப்பதிவு ஆகியவை குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘க்ராணி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (பார்ட் 2) வெளியிடப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்தார். மேலும், சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடின்றி ரசிகர்கள் இப்படத்திற்கு அளித்த வரவேற்பு தங்களுக்கு புதிய உற்சாகத்தையும், எதிர்காலத்தில் மேலும் சிறந்த படங்களை உருவாக்கும் உத்வேகத்தையும் வழங்குவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.