தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஃபெஞ்சல் புயல் சீற்றத்தில் இருந்து மக்கள் இன்னமும் விடுபடாத நிலையில், புதுச்சேரி அரசு வழங்கிய ரூ.5 ஆயிரம் நிவாரணத்தோடு இருக்கின்றது. இந்த தொகை கூட புதுச்சேரி அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் கேட்ட நிதி எதுவும் புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் புயல் வெள்ள சீற்றக்காலங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. வருவாய் துறை கணக்கெடுப்பு நடத்தி வீடு இடிந்த, முற்றிலும் சேதமான எந்த வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை.
முதல்வரை தவிர்த்து அனைவரும் டெல்லிக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் புதுச்சேரி புயல் மழை பாதிப்பு குறித்து யாரும் துறை அமைச்சர்களை சந்தித்தோ, மனு அளித்தோ பேசவில்லை. இரட்டை எஞ்சின் பூட்டிய இந்த அரசு, சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரி மிகப்பெரிய சேதமடைந்துள்ளது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எதுவும் காலத்தோடு கேட்டால் தான் கிடைக்கும். ஆகவே புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். என்றார்.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, பொதுவாக பேரவை நடக்கும்போது உறுப்பினருக்கு பேச அனுமதி மறுப்பது. அவர் கொடுக்கும் தீர்ப்பில் திருப்தி இல்லை. அல்லது ஒரு சார்பாக, ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்.
தன்னுடைய மரபுகளை மீறுகிறார் என்றால் நிச்சயம் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம். இப்போது சபை எதுவும் நடைபெறவில்லை. கடந்த 4 ஆண்டுகாலமாகவே சட்டப்பேரவைத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். இதனை நாங்களும் சட்டப்பேரவையில் கண்டித்துள்ளோம். நேரடியாகவும் தெரிவித்துள்ளோம்.
தற்போது பேரவைத் தலைவர் மீது புகார் அளித்துள்ளவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொந்த அரசியல் செய்கின்றனர். பாஜகவின் ஏ மற்றும் பி டீம் இரண்டுக்கும் உள்ள பிரச்சனை. இவர்களை நம்பி நாம் சென்று, தலைமையிடம் கேட்டு முடிவெடுத்து செய்யும் நிலையில் இல்லை. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸூக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது.
இதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால் எங்கள் கூட்டணி கட்சி என்பதால் தலைமையிடம் ஆலோனை நடத்தி பரிசீலனை செய்வோம்.இந்த விஷயத்தில் சுயேட்சைகளுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது என்பது அவர்களின் நிலைப்பாடு.
புதுச்சேரியில் நடைபெறும் இந்த ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு இந்த ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படவில்லை. என்றார்.
தேசிய கல்விக்கொள்கைக்கு புதுச்சேரி அரசு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகள் செய்து கொடுக்கப்படவில்லை. 30 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர். ஆகவே பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்பபுடையதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.