தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா….

தமிழகத்தில் திமுக அரசின் திட்டங்களில் ஒன்றான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து பல வகையான திறமைகளை கற்றுக்கொள்ளும் வகையில், நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த கல்வி ஆண்டில் நான் முதல்வன் தேர்வு மற்றும் பயிற்சிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 35 ஆயிரம் மாணவ மாணவிகளிலிருந்து 25 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்ட 25 மாணவர்களில் 5 மாணவர்கள் திருவாரூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட திருவாரூர் திரு. வி. க அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 15 நாட்கள் தென்கொரியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பேராசிரியர்களுடன் இணைந்து பல்வேறு செய்முறை பயிற்சிகளை மேற்கொண்டனர்.

15 நாள் தென்கொரியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு திருவாரூர் திரு. வி. க அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் இன்று பாராட்டு விழா நடத்தியது.

தமிழக முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 மாணவர்களில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்களான கார்த்திகா, முருகதாஸ், பரத்ராஜ், நிரேஷ், சத்ரியன் ஆகிய ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சத்ரியன் என்ற மாணவர் சுகாதார ஆய்வாளர் பணிக்காக நேர்முக தேர்வுக்குச் சென்றதால் அவர் மட்டும் தென் கொரியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தென்கொரியா சுற்றுப்பயணம் கொண்டு கல்லூரி திரும்பிய நான்கு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் சுஜாரிதா மாக்டலின் தலைமையில், நான்கு மாணவர்களுக்கும் சால்வை அறிவித்து பாராட்டி, சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டின் முதல்வருக்கும், நிதி உதவியுடன் பல்வேறு உதவிகளை அளித்த துணை முதல்வருக்கும் மாணவ மாணவிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *