கோவை

கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

Confideo Legal Solutions மற்றும் தானிஷ் அகமது கல்லூரி இணைந்து சமூக நலன், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநல சேவையில் சிறப்பாக பங்களித்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களை கௌரவிக்கும் பாராட்டு விழா, கோவை மாவட்டம் பிச்சனூரில் அமைந்துள்ள தானிஷ் அகமது கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சட்ட அறிவை பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சமூக சேவை, மனித உரிமை பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பல்வேறு சட்ட நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் வழக்கரைஞர்கள் சூர்ய பிரபா, ஜமுனா மற்றும் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.அவர்கள் தங்களது உரைகளில், சமூக நலன் மேம்பாட்டில் சட்டத்தின் பங்கு, பொதுமக்கள் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான சட்ட பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, “மனித ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு – சட்ட ரீதியான ஆய்வு” என்ற தலைப்பில் வழக்கறிஞர் திவ்யா சந்திரன் சிறப்புரையாற்றினார். தனது உரையில், மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பாதுகாப்பு சட்டங்களின் அவசியம், உணவு கலப்படம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள், நுகர்வோர் உரிமைகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் சட்டப் பொறுப்புகள் குறித்து ஆழமான ஆய்வுடன் சட்ட நிபுணத்துவ பார்வையில் விளக்கினார். இத்தகைய சட்ட அறிவு இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தானிஷ் அகமது கல்லூரி இயக்குனர் டாக்டர் அருள் குழந்தை வேலு சிறப்பு வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில், மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய சட்ட விழிப்புணர்வும் சமூக பொறுப்புணர்வும் வளர வேண்டும் என்றும், இவ்வகை நிகழ்ச்சிகள் மாணவர்களின் அறிவுத் திறன் மற்றும் சமூக சிந்தனையை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும், சட்டம் மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனவும் அவர் ஊக்குவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், சட்ட நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்ட மாணவர்கள், சட்டம் தொடர்பான பல புதிய தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை பெற்றதாக தெரிவித்தனர். சமூக நலன் மற்றும் சட்ட அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *