தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, தமிழகவேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் சமத்துவபுரக் குடியிருப்புகளை திறந்து வைத்து, வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,கலைஞர் மு. கருணாநிதி 1997-98இல் தமிழ்நாட்டில் சாதி, மதம் பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களும் ஒரே பகுதியில் ஒரே மாதிரியான வீடுகளில் ஒற்றுமையுடன் வாழும் வகையிலும், தந்தை பெரியாரின் சமத்தவக் கொள்கையை பரப்புவதற்கும், சாதிய ஒடுக்குமுறையை அகற்றி சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், ஏற்றத்தாழ்வை இடித்து சமூகத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் அவர்களின் பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்,சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கும், சாதி அடிப்படையிலான குடியிருப்பு பிரிவினை ஒழிப்பதற்காகவும், சாதியற்ற சமூதாயத்தை உருவாக்கவும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அச்சமத்துவபுர குடியிருப்புகளை புதியதாக சீரமைப்பதுடன் புதிய சமத்துவபுர குடியிருப்புகள் கட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதனடிப்படையில் பூவாணிக்குப்பம் ஊராட்சி, மேல்பூவாணிக்குப்பம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் ஒரு வீடு 5 சென்ட் வீட்டு மனையுடன் 300 சதுர அடி பரப்பளவில் ரூ.6,73,000 வீதம் ரூ.6,73,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சமத்துவபுரத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ரூ.6,50,000 மதிப்பீட்டிலும், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.20,00,000 மதிப்பீட்டிலும், குறுக்குசாலை மேம்பாட்டு பணி ரூ.36,75,000 மதிப்பீட்டிலும், 45 எண்ணிக்கை தெருவிளக்குகள் ரூ.9,00,000 மதிப்பீட்டிலும், போர்வேல், பம்ப்செட் மற்றும் பம்ப்ரூம் ரூ.9,50,000 மதிப்பீட்டிலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் ரூ.11,50,000 மதிப்பீட்டிலும், மெயின்ரோடு மேம்பாட்டு பணி ரூ.30,23,000 மதிப்பீட்டிலும், சங்கிலி குளம் முதல் நல்லாங்குப்பம் சாலை மேம்பாட்டு பணி ரூ.10,20,000 மதிப்பீட்டிலும், கால்நடை தீவன வளர்ப்பு தோட்டம் வரை இணைப்பு சாலை மேம்பாட்டு பணி ரூ.13, லட்சத்து36, ஆயிரம் மதிப்பீட்டிலும், சிறுபாலம் ரூ.10, லட்சத்து80, ஆயிரம் மதிப்பீட்டிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலகம், ஊராட்சி செயலகம், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடம், சுகாதார மையங்கள் உள்ளிட்ட 54 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே முன்னோடியாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களுக்கு உந்துசக்தியாக திகழ்ந்து வருகிறார். பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ரா.அ.பிரியங்கா, செயற்பொறியாளர் வரதராஜபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“செய்தி ஜீவாசெந்தில் “