அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ப.இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், அம்மா பேரவை மாவட்டச் செலர் ஓ.பி.சங்கர், இணைச் செயலர் பிரேம்குமார், வழக்குரைஞர் செல்ல.சுகுமார், கட்சி ஒன்றியச் செயலர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
ஜெயங்கொண்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.