மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் அஸ்ட்ரோ வயது முதிர்வால் உயிரிழப்பு-21 குண்டுகள் முழங்க அடக்கம்
மதுரை மத்திய சிறையில் பராமரிக்கப்பட்டு வந்த போலீஸ் மோப்ப நாய் அஸ்ட்ரோ வயது முதிர்வு காரணமாக இறந்தது. 21குண்டுகள் முழங்க அந்த நாயை அடக்கம் செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் அஸ்ட்ரோ என்ற பெயரில் மோப்ப நாய் பராமரிக்கப்பட்டு வந்தது.கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய சிறையில் நடக்கும் விவகாரங்களில் துப்பு துலக்க உதவி வந்தது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில், மதுரை மத்திய சிறையில் போதைப்பொருள் தடுப்பு தொடர் பான சோதனை நடைபெறும். இதில் மோப்ப நாய் அஸ்ட்ரோ ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வால் நேற்று அஸ்ட்ரோ நாய் உயிரிழந்தது.இது சிறைத்துறை காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, உயிரிழந்த டி. எஸ். பி. அந்தஸ்துள்ள அஸ்ட்ரோ மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரை மத்திய சிறை வளாகத்தில் நாயின் உடலுக்கு பூக்கள் தூவி, மலர் மாலை அணிவித்தனர். சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், சிறை சூப்பிரண்டு சதீஷ்குமார், ஜெயிலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் சிறை வளாக தோட்டத்தில் மோப்ப நாய் அஸ்ட்ரோ அடக்கம் செய்யப்பட்டது.