தூத்துக்குடி நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நான்காம் நிலை ஊழியர்களுக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், அரசாணை எண் 33-ஐ திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம உதவியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஆண், பெண் கிராம உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்-தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாநிலச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

கிராம உதவியாளர்கள் போராட்டம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறை தொடர்பான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *