கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு

கமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் தனியார் மண்டபத்தில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான மாநாடு நடைபெற்றது.

மாவட்ட மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் பால்சாமி தலைமையில், உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய பொறுப்பாளர் சுந்தரபாபு, தேசிய மீனவர் பேரவையின் துணைத் தலைவர் குமரவேலு, பசும்பொன் தேவர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தலைவர் சுந்தர் ஆகியோரது முன்னிலையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் உழவர்கள், வீட்டு வேலை தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் தொழிலாளர்கள், மீனவர்கள், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள், நெசவாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப் படாமல், சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களையவும், அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் எழுப்பவும், உழைக்கும் மக்கள் கூட்டம் அனைத்திந்திய அளவில் கருத்து பரப்புரை கூட்டம் நடத்தி வருகிறது.

கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 15 மாநிலங்களில் இந்த கருத்து பரப்புரை கூட்டம் நடைபெறும் எனவும் நாட்டின் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர் களுடன் நேரடியாக உரையாடவும், அவர்களுக்கு குரல் கொடுப்போரின் போராட்ட நியாயங்களை எடுத்துக் கூறவும் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சுந்தரபாபு தெரிவித்தார்.

தமிழ் மாநில கட்டட தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் தலைவர் முனியசாமி, தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் சின்னப்பன் நன்றி கூறினார். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *