ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2025 அனுசரிப்பு
14 வகை புற்றுநோய்கள் குறித்த முக்கிய தகவல்கள் கொண்ட டிஜிட்டல் ஃபிளிப் புக்கை அறிமுகம்
2025 ஆம் ஆண்டிற்கான உலக புற்றுநோய் தினத்தைக் அனுசரிக்கும் விதமாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 4.2.25 செவ்வாய்க்கிழமை அன்று பொதுவான புற்றுநோய்கள் குறித்த ஆங்கிலம் மற்றும் தமிழில் தகவல்கள் அடங்கிய புதுமையான டிஜிட்டல் ஃபிளிப் புக் மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தருடன் சேர்ந்து, இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன்; ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. கார்த்திகேஷ்; மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில், ஃபிளிப் புக் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் வரவேற்றார். அதை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் சுமையையும் அவர் எடுத்துரைத்தார். 2020 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 12 லட்சமாக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2025 ஆம் ஆண்டில் 15.2 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 5-10 லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்றார்.
இந்திய நகர்ப்புற பெண்களில் மார்பகப் புற்றுநோயும் கிராமப்புறப் பெண்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்களாக உள்ளதாகவும், இந்திய ஆண்களிடையே தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை முன்னணி புற்றுநோய்களாக இருப்பதாகவும் கூறினார். ஆண்களுக்கு வரக்கூடிய இந்த 2 புற்றுநோய்களில் புகையிலை பயன்பாடு தான் 50% க்கும் அதிகமான பேருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாகிறது என்றார்.
ஒரு ஆய்வின் படி 9 இந்தியர்களில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய அவர், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை ஆரம்பகாலதிலேயே கண்டறிய இதவக்கூடிய பரிசோதனைகள் இன்று மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
50 வயதுக்கு மேற்பட்ட புகை பழக்கம் உள்ள ஆண்கள் குறைந்த அளவிலான CT ஸ்கேன் செய்துகொள்வது அவர்களை முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும் என்றார். அதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் உள்ளிட்ட தடுப்பு பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரின் குடும்பத்தில் பெற்றோர் உள்பட முன்னோர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அவரும் கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் எனவும் 40 வயதை கடந்த பெண்கள் ஆண்டுக்கு 1 முறை மார்பகப்புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை பரிசோதனையான பேப் ஸ்மியர் சோதனையை செய்து கொள்ள நாம் தான் ஒரு சமுதாயமாக முன்வந்து ஊக்கப்படுத்தவேண்டும் என்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஃபிளிப் புக்ஸ் பற்றிப் பேசிய டாக்டர் குகன், இந்த டிஜிட்டல் புத்தகத்தில் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கணைய புற்றுநோய், லிம்போமா, விரைப் புற்றுநோய், லூக்கீமியா, வயிற்றுப் புற்றுநோய், மல்டிப்பிள் மைலோமா, மூளைப் புற்றுநோய் மற்றும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்கள் ஏன் ஒருவருக்கு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, அதன் சிகிச்சை முறை, தடுப்பு முறை, மேலாண்மை முறை என அனைத்தையும் குறித்த விரிவான தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இதை இலவசமாக மக்கள் படித்து தெரிந்துகொள்ள பிரத்யேக QR குறியீடு மற்றும் வலைத்தளம் (https://mhits.in/SRIOR/WCD_2025/index.html)உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், இந்த ஃபிளிப் புக்கை பயன்படுத்தும் போது அது புத்தகத்தைப் படிக்கும் அனுபவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்வில் அடுத்ததாக எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை உரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து கோவை எஸ்.பி. கார்த்திகேயன் சிறப்பு உரையை வழங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை ஆற்றினார்.
குறிப்பு: பிப்ரவரி மாதம் முழுவதும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச ஒரு மாத கால புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டம் வழங்கப்படும்.