சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீர்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். புதிய தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சட்டைநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு நகராட்சி சார்பில் கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும். சீர்காழி நகர் பகுதியில்30 ஆண்டுகளாக மண் சாலையாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். சீர்காழி நகர் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்கூட்டியே தெரிவித்தனர்

ஆனால் இதனால் வரை நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன்( பாமக), 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜசேகரன் (தேமுதிக) ஆகியோர் சாமியானம் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *