புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா திருவள்ளுவர் விருது வழங்கும் விழா பாவாணர் பிறந்தநாள் விழா மத்திய மாநில அரசின் விருது பெற்ற அறிஞர்களுக்கு பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன் தாசு வரவேற்புரை ஆற்றினார். துணைத்தலைவர் தமிழ்மாமனி ந.ஆதிகேசவன், பொருளர் மு.அருள் செல்வம்,துணை தலைவர் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் தெ.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் “மொழிகளுக்கெல்லாம் தாயானவள்”என்னும் தலைப்பில் மருத்துவர் கலைவேந்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் பாவலர் சு.சங்கர், பாவலர் அன்புநிலவன், இர.ஆனந்தராசன், சிங்கை அருள்ராஜ், ஓவியர் ரவி, தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி ஆகியோர் கவிதை வாசித்தனர். விழாவில் தாமல் கோ.சரவணன் எல்லா மொழிகளுக்கும் தமிழே மூல மொழி என்றும் பாவாணர் உரைகளை மேற்கோள்காட்டி தமிழின் சிறப்புகளை பற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் முனைவர் முத்து அறக்கட்டளை வழங்கும் ரூபாய் 10,000 பொற்கிழியும் திருவள்ளுவர் விருதும் மூத்த தமிழறிஞர் தமிழ்மாமனி துறைமாலிறையன் அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து வழங்கி பாராட்டினார்.
மத்திய மாநில அரசின் விருது பெற்ற பத்மஸ்ரீ விருதாளர் பூ.தட்சிணாமூர்த்தி, தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது பெற்ற சிலம்பு நா.செல்வராசு,தமிழக அரசின் அயோத்திதாசர் பண்டிதர் விருது பெற்ற மு.ம.சச்சிதானந்தம்,நடுவண் அரசின் கலைக்கான இளையோர் விருது பெற்ற ஏம்பலம் மோ.பிரகாஷ் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலைமாமணி எம்.எஸ். இராஜா,பொறிஞர் மு.சுரேஷ்குமார், பாவலர் அ.சிவேந்திரன், பாவலர் இர.ஆனந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் தமிழ்மாமணி முனைவர் அ.உசேன் நன்றியுரை ஆற்றினார்