கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானா பகுதியில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட தனித்துவமான தொழிலாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கோவை மாநகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முக்கிய ரவுண்டானாக்களில் கலைநயமிக்க சிலைகள் அமைத்து நகரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரமான கோவையை பிரதிபலிக்கும் வகையில் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை, கையில் உளியுடன் தன்னைத் தானே செதுக்கும் தொழிலாளரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. “தொழிலாளரே தனது விதியை தானே உருவாக்குபவர்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கோவையின் தொழில் பாரம்பரியத்தையும் உழைப்பாளர்களின் பெருமையையும் பிரதிபலிக்கிறது.
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த சிலையை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.
புதிய சிலை அமைக்கப்பட்டதன் மூலம் ரவுண்டானா பகுதி மேலும் கண்ணைக் கவரும் வகையில் மெருகேறியுள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் மத்தியில் இந்த சிலை சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநகரத்தின் கலைநயம் மற்றும் அடையாளத்தை வலுப்படுத்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.