திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பங்குனி பாடைக்காவடி திருவிழாவை முன்னிட்டு கடந்த 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா உடன் துவங்கியது. நேற்று 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை ஒட்டி மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு வலங்கைமான் குடமுருட்டி ஆற்றில் இருந்து பூஜைகள் செய்து முதல் காப்பு கட்டி சக்தி கரகம் எடுத்து வீதி உலா காட்சி நடைபெற்று ஆலயம் வந்தடைந்து பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நலச்சங்கத்தினர்,
இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகின்ற 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதலும், அன்று முதல் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், தினசரி மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வருகின்ற 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக் காவடி திருவிழா நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கர் / ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், விழா உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.