அரியலூர், பிப்.14:
உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம் பேரூராட்சியில் செயல்படும் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார் தலைமையிலும், செயல் அலுவலர் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 8 ஏலதாரர்கள் வங்கி வரைவு ஓலை (DD) பெற்று, பேரூராட்சி அலுவலகத்தில் முன்கூட்டியே ஒப்படைத்திருந்தனர்.

சுமார் 10.30 மணியளவில் ஏலம் தொடங்கப்பட்டது ஆனால், ஏலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் மட்டும் நேரில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வரைவு ஓலை எடுத்திருந்த பிற ஏலதாரர்கள் எவரும் பிற்பகல் 2.00 மணி வரை வராத நிலையில், தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஏலம் மறு தேதி அறிவிப்பு இன்றி ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏலத்தில் பங்கேற்ற பிரபு என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்தார். கடந்த 35 ஆண்டுகளாக இந்த பேரூராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எவரும் வாரச்சந்தை கடைகளுக்கான ஏலம் எடுக்கவில்லை என்றும், இம்முறை தாம் மற்ற சமூகத்தினருக்கு இணையாக வங்கி வரைவு ஓலை பெற்று ஏலத்தில் பங்கேற்க முன்வந்ததன் பின்னர், மற்ற ஏலதாரர்கள் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இது சமூக அடிப்படையிலான பாகுபாடு காரணமாக ஏற்பட்டதா என்பதைக் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இல்லையெனில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *