இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுத்த பட்ஜெட் – முதல்வருக்கு தமிழ்நாடு விவசாய இடுபொருள்கள் விற்பனையாளர் சங்க மாநில தலைவர் எம்.மோகன் வாழ்த்து.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்ட வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு விவசாய இடுபொருள்கள் விற்பனையாளர் சங்க மாநில தலைவர் எம்.மோகன்.

விவசாயிகளின் நலன்களுக்காக தனியாக வேளாண்மை பட்ஜெட் என உருவாக்கி அதற்கான தனி நிதி ஒதுக்கீட்டையும் செயல்படுத்தி வெளிவந்திருக்கும் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாய இடுபொருள்கள் விற்பனையாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வரும் நிதியாண்டில் வேளாண்மை துறைக்கு மொத்தமாக 45 ஆயிரத்து 666 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான சிறப்பு திட்டங்களை வகுத்து தந்த தமிழ்நாடு அரசவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நூற்றுக்கணக்கான அருமையான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறீர்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க சில திட்டங்கள் குறித்து நான் பாராட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரித்து உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் 160 கோடி ரூபாய் செலவில் நெல் சிறப்பு தொகுப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்ததற்காக மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடைகால உழவுப் பணிகளை மேற்கொள்வதற்காக 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு முக்கியமான அம்சம் மக்களின் ஊட்டச்சத்து தேவையை உறுதிப்படுத்தும் வகையிலும் மேலும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையிலும்125 கோடி ரூபாய் செலவில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ஒன்று செயல்படுத்தப்படும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக நாம் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டியது மண்வளத்தை காத்திடும் வகையில் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 142 கோடி ரூபாய் செலவில் இந்த மண்ணுக்கு உயிர் தரக்கூடிய வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

இயற்கை வேளாண்மையை பரவலாக்கும் வகையில் 12 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருப்பது மிக மிக முக்கிய செய்தியாகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை தலைசிறந்து விளங்கப் போகிறது என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.

மொத்தத்தில் வீழ்ந்து கிடந்த விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்து விவசாயிகள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என இந்த சமயத்தில் எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாய இடுபொருள்கள் விற்பனையாளர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என எம்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *