திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
கடந்த பிப்., 27 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மயில், சிம்மம் மற்றும் அன்ன வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். பக்தர்கள் கரும்பு தொட்டில், அலகு குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அம்மன் குளத்தில் இருந்து அக்னிச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து மீண்டும் குளத்தில் குடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து கோயில் முன்பு ஊன்றப்பட்ட கழுமரத்தில் இளைஞர்கள் ஏறினர். கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இரவில் கம்பம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் பரபம்பரை பூசாரிகள் செய்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.