புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழாவுடன் இணைந்து விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ. சண்முகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திரு.M.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினர். பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முருகானந்தம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி S.செல்வா அவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, கோட்டைப்பட்டினம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜி. வெங்கடேசன் மற்றும் திருத்தங்கல் நாடார் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஜோ. சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மீன்வளத்துறை ஆய்வாளர் நா. கார்த்தீஸ்வரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர் கு.சசிக்குமார், தலைமையாசிரியர் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் அலி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர், வார்டு கவுன்சிலர்கள் அபிராமி திருமுருகன் மற்றும் ராம்குமார், புதுக்குடி ஊர் தலைவர்கள் ராசு, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களையும் அழைப்பாளர்களையும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மி.ஜோக்கின் ராய் வரவேற்றார். பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமையாசிரியர் நல்லாசிரியர் மா. பால்துரை வாசித்து விளக்கினார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கல்விச் சீர் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நகலெடுக்கும் இயந்திரம் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
சிறப்பு விருந்தினர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனது உரையில், “போதை இல்லா தமிழ்நாடு” உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்; அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார். தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் தனது உரையில் பெண் கல்வியின் அவசியத்தையும், அதன் சமூக முன்னேற்றத்தில் உள்ள முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உரை நிகழ்த்தினர். பரிசளிப்பு நிகழ்வை ஆசிரியர்கள் பவானி, பாகம்பிரியாள், ம. மலையரசி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கலைநிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் பார்கவி, மைக்கேல் பெட்டிசியா, திவ்யபாரதி, தேவிகா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வு முழுமையான ஒழுங்குடனும் உற்சாகத்துடனும் நடைபெற்ற இவ்விழா, மாணவர்களின் பல்திறன்களை வெளிப்படுத்தியதுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.