வலங்கைமான் தாலுகாவில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 105 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா 47. ரகுநாதபுரம், 45. கிளியூர், 46. அவளிவ நல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் ரகுநாதபுரத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். திருவாரூர் உதவி கலெக்டர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் பால சரஸ்வதி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வீ. அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவகுமார் வரவேற்றுப் பேசினார்.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:- தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மின் பற்றாக்குறை உள்ளதாகவும், அதனை சீர் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். விவசாயத்திற்கு மின்சாரம் பற்றாக்குறை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடியிருப்பு மனை பட்டா வேண்டும் என பலர் மனு அளித்துள்ளனர். ஆட்சேபனை அற்ற மனையாக இருந்தால் விசாரணை செய்து உடனே பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

குடும்பத்தில் ஏற்படும் அவசியமற்ற தகராறுகளை கணவனோ அல்லது மனைவியோ செய்யும் போது அதனை சுமூமாக தீர்த்து வைக்க 181 எனும் நம்பருக்கு போன் செய்தால் ரெண்டு போலீசார் உடனே வந்து அவர்களின் குறைகளை கேட்டு சுமூகமாக தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சில இடங்களில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது.

அதனை தடுக்கும் வகையில் கிராம பகுதிகளில் 21 வயதுக்கு குறையாமல் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் அலுவலர்களை தேடி சென்று குறைகளை கூறிவந்த நிலையில், இன்று மக்களை தேடி மாவட்ட நிர்வாகமே உங்களை நாடி குறைகளை கேட்க வந்துள்ளோம். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்கள் பெற்று பயனடைய அதிகாரிகள் எப்போதும் துணையாக நிற்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக முகாமில் 184 மணிக்கள் பெறப்பட்டு அதில் 138 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி 105 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை பெற ஆணை, வேளாண் உபகரணங்கள், மரக்கன்றுகள் என நடத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வழங்கினார். முகாமில் வருவாய் ஆய்வாளர் முகிலன், ரகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டித்துரை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் ரவி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *