திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 3ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்
திருவாரூர், மார்ச்.30- திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டார பொது உறுப்பினர் கூடுகை கூட்டம் இன்று (30.3.25) நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சேவியர், விஜயா, ஜோசப் கிராஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஈவேரா, மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசியதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக கலைய வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு பழைய நிலுவைகளையும் வழங்க வேண்டும். இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டா ஜியோ (Federation Of Teachers Association and Government Employees Organisation-FOTA GEO) சார்பில் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தினை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் போட்டா ஜியோ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 25ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர் ஈவேரா பேசினார். நிகழ்ச்சிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், செல்வமணி, மாவட்ட மகளிர் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டாரச் செயலாளர் சந்திரமோகன் வரவேற்றார், இறுதியில் வட்டாரத் துணைச் செயலாளர் மார்க்கெட் ஹேமலதா நன்றி கூறினார்.