“காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், அதிமுக உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.”

தமிழக தேர்தல்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணிகள் உருவாகியுள்ளன.

இதுபோக தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து தேர்தல், களம் காணுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக உரிமை மீட்புக் கழகத்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நடத்தி வருகிறார். ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பெரும்பாலானோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கட்சி ரீதியாக எடுக்கப்படும் கூட்டணி முடிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் காட்டி வரும் தாமதமே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மொத்தமுள்ள 88 மாவட்டச் செயலாளர்களில் 77 பேர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தும், தலைமை இதுவரை எந்த முன்னேற்றமும் எடுக்காதது நிர்வாகிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ஆதரவாளர்களிடம் விளக்கம் அளித்த இரஞ்சித் குமார், ஓ.பி.எஸ் மீது தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை என்றும், காஞ்சிபுரத்தில் தங்களுக்கு இருக்கும் பலமான கட்டமைப்பை அவரிடம் விளக்கிவிட்டுத்தான் முறைப்படி பிரிந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 19-ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், அவர் ஒரு பரபரப்புத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, ஓ.பி.எஸ் அணியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், ஒரு மாவட்ட நிர்வாகமே கூண்டோடு விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வரும் தேர்தலை முன்னிட்டு விஜய்யுடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அவரது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கேட்ட கேள்விக்கு, பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் எனத் தங்களது விருப்பத்தையும், ஆதரவையும் தெளிவாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த இக்கட்டான சூழலிலும், தலைமை எந்தவிதமான அரசியல் முடிவுகளையும் எடுக்காமல் மௌனம் காப்பது களத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என அவரது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *