இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை .ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட் என தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் தலைவர்
ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசினார். அதன் பின்னர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு இடைக்கால வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் வாசித்துள்ளார். தேர்தல் வரும் வேளையில் விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. மேலும் விவசாயிகளுக்கு கூடுதலாக எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தூர்வாரும் பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எதிர்பார்த்த நிலையில் “கடலில் தண்ணீர் கடைமடையில் கண்ணீர்”என்கிற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தூர்வாரும் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்தவர். அவர்களுக்கு காவிரி கரையில் முழு உருவ சிலையும் மணிமண்டபமும் அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை பட்ஜெட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கை என தனி நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படும் என்று அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகளை அழைத்து கருத்து கேட்டு கூட்டம் என்கிற ஒரு சடங்கை நடத்தி ஒரு பட்ஜெட்டில் கூட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்தவை பற்றிய செயல்முறை விளக்கமே இந்த பட்ஜெட்டிலும் இருந்தது.
காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய விளைபொருள்களின் மதிப்பு கூட்டு பொருளாக உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என ஆவலோடு காத்திருந்து மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்தோம்.
திமுக ஆட்சி நிறைவடையும் நிலையில் விவசாயிகளை ஏமாற்றத்தில் தள்ளிய இந்த பட்ஜெட் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்றார்.