பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர்
டெல்லி மாநில அரசு, தெற்கு டெல்லி ஜங்க்புரா பகுதியில் மேம்பாலம் புனரமைப்பு, கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் பெருநகர் அபிவிருத்தி பணிகளுக்காக “மதராசி குடியிருப்பு” என அறியப்படும் பகுதியை அகற்ற தீர்மானித்துள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக இங்கே வாழும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் வாழ்விடம் இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அரசு வழங்கிய தகவலின்படி, இவர்கள் அனைவரும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. இது பள்ளிக்கு செல்வது, வேலைக்குச் செல்லுவது போன்ற வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக மாணவர்களின் கல்வி தொடர முடியாமல் போகும் அபாயம், வேலைக்குச் செல்லும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பல்வேறு அமைப்புகளின் தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து கூறியதாவது:
“மதராசி குடியிருப்பை அகற்றுவது, தமிழகத்திலிருந்து வந்த பல தலைமுறை மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் செயல். வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளை மீறிய இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மறுசீரமைப்பிற்கான திட்டங்களில் மனிதநேயம் பூரணமாக இருக்க வேண்டும்.”
இக்காரணத்தால், மாநில அரசிடம் இந்த உத்தரவை மீண்டும் பரிசீலிக்கவும், குடியிருப்பாளர்களுக்கு வாழ்வாதார பாதிப்பில்லாமல் நிவாரண நடவடிக்கைகளை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும் என உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு ஞானமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.