நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளுக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரியில் ராட்சத குடிநீர் குழாய்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் சஞ்சீவி குமார் வந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி பைபாஸ் சாலை அருகே ராட்சத குழாய்களுடன் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரியில் ராட்சத குடிநீர் குழாய்களை இணைத்து கட்டிருந்த பெல்ட் அறுந்தது. இதனால் லாரியில் இருந்த ராட்சத குடிநீர் குழாய்கள் உருண்டு கீழே விழுந்தது. இதில் ஒரு குழாய் அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்தது. மற்றொரு குழாய் லாரியின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தது. கார் மீது குடிநீர் குழாய் விழுந்ததால் கார் சேதமடைந்தது.
காரில் இருந்த திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கொத்தங்குடியை சேர்ந்த அம்புரோஸ் மகன் சத்தியசீலன் படுகாயமடைந்து காருக்குள் சிக்கி கொண்டார். உடனே சம்பவ இடத்தில் திரண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியசீலனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் வந்த 3 பேருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் லாரி டிரைவர் சஞ்சீவி குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.