திருவாரூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கலைஞர் நூற்றாண்டு காய் கனி அங்காடி வளாகம் 13 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 271 கடைகள் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து தொழில் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உடன் இணைந்து புதிதாக கட்டப்பட்ட காய்கனி அங்காடி வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காய்கனி அங்காடி வளாகம் முன்பு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் திரு உருவப்படம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு…
ஆண்டுதோறும் 26 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு நகராட்சி நிர்வாக துறைக்கு ஒதுக்கி இருக்கிறது. 1986இல் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது நான் சேர்மனாக பதவி வகித்தேன். அப்போது மொத்தமே ஒரு யூனியனுக்கு 13 லட்சம் தான் தருவார்கள். சம்பளம் கொடுக்க கூட பத்தாது.
ஆனால் இன்று ஊரகத் துறைக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார் தமிழக முதல்வர். ஒன்றுபட்ட உள்ளாட்சிக்கு 55 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்.
குடிநீர் திட்டத்துக்காக இதுவரை நமது முதலமைச்சர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் தந்து இருக்கிறார். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது நாலு கோடியே 28 லட்சம் மக்களுக்கு மட்டும்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நான்காண்டு காலத்தில் மட்டும் மேலும் 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு பாதுகாக்க பட்ட குடிநீர் வழங்குவது வேறு எந்த காலத்திலும் நடக்கவில்லை என்றார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
நகராட்சிதுறை அமைச்சர்
கே.என்.நேரு தெரிவித்ததாவது –
தமிழ்நாடு முழுவதும் நகர் புறத்தில் மக்கள்தொகை நாளுக்குநாள் கூடிக் கொண்டே இருக்கிறது , ஆகையால் அடிப்படை வசதிகளை அனைத்தையும் செய்ய வேண்டும் என தமிழ்நாடுமுதலமைச்சர் ஆணைப்படி பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூரில் அமைந்துள்ள மார்க்கெட்டின்படி தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் மார்க்கெட் கட்டுமான பணி நடைபெறுகிறது , புதிய பேருந்து நிலையங்கள் , அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன , ஏற்கனவே உள்ள பழைய பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது ,
எல்லா இடத்திலும் பேரூராட்சி அளவிலே ஒவ்வொரு பேரூராட்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டு குடிநீருக்காக முதலமைச்சர் வழங்கி உள்ளார்கள் ,
குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 4 ஆயிரம் MLD என்பதை கூடுதலாக 2 ஆயிரம் MLD வழங்க திட்டங்கள் மூலம் பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது ,எனவே நகராட்சிதுறை என்பது
அவரே உள்ளாச்சிதுறை அமைச்சராக இருந்தவர் , மேயராக இருந்த காரணத்தில் என்ன பணிகள் எப்படி செய்யவேண்டும் என்பதற்கு அறிவுரை வழங்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்களே பார்ப்பீர்கள் மார்க்கெட் எப்படி இருக்கிறது என்று என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.