திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் கைது. ஒரு இளஞ்சிறார், சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர். 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, திருவொற்றியூர், ஏகவள்ளியம்மன் கோயில் தெருவில் லோகேஷ் (எ) யோகேஷ்வரன், வ/28, த/பெ.ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10.05.2025 அன்று இரவு, திருவொற்றியூர், எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக ஆனந்தமுருகன் உட்பட 3 நபர்கள் சேர்ந்து மேற்படி லோகேஷ் (எ) யோகேஷ்வரனை வழிமறித்து, தகாத வார்த்தைகள் பேசி, அவரை கத்தியால் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து, மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இரத்த காயமடைந்த லோகேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மேற்படி சம்பவம் குறித்து லோகேஷ் கொடுத்த புகாரின்பேரில், H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆனந்த முருகன் (எ) குள்ள ஆனந்த், வ/20, த/பெ.கோவிந்தராஜ், சரஸ்வதி நகர், திருவொற்றியூர், சென்னை என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயது இளஞ்சிறாரிடம் விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் புகார்தாரர் லோகேஷ் (எ) யோகேஷ்வரன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கமல் என்பவரை கத்தியால் தாக்கியதும், இந்த முன்விரோதம் காரணமாக கமல் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மேற்படி லோகேஷ் (எ) யோகேஷ்வரனை கத்தியால் தாக்கியதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்தமுருகன் (எ) குள்ள ஆனந்த் என்பவர் N-1 இராயபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே கொலைமுயற்சி, கஞ்சா, வழிப்பறி, அடிதடி உட்பட சுமார் 20 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்தமுருகன் (எ) குள்ள ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 16 வயது இளஞ்சிறார், சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.