கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் திக்ஷமுகமது நசிமுத்தின் (ஓய்வு) முன்னிலையில் தொடங்கி வைத்தார்..
கடலூர் நகர அரங்கில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் (ஓய்வு) அவர்கள் முன்னிலையில், விழுப்புரம் சராகம் காவல்துறை துணைத் தலைவர் அரா.அருளரசு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய முழு நேர உறுப்பினர் டாக்டர் எம்.சி.சாரங்கன் (ஓய்வு) ஆகியோர் பங்கேற்புடன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் (ஓய்வு) தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இணையவழி விளையாட்டின் அடிமைத்தனத்தைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “இணையவழி விளையாட்டுக்கு அடிமையாவதால் மாணவர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை,திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை ஆறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏழாவது விழிப்புணர்வு முகாம் கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெறுகிறது.
இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தின் பல அம்சங்களை நிபுணர்கள் எடுத்துரைத்தனர் மற்றும் இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட பல்வேறு பங்குதாரர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைத்தனர். இந்த பிரச்சனையைச் சமாளிப்பது தொடர்பாகவும் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு மன்றமாக இந்த விழிப்புணர்வு முகாம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 120 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா நிறுவனங்கள் என சுமார் 225 பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்யும், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடைசெய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம்-2022 இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் என தனி ஆணையம் அமைக்கப்பட்டு இணையவழி சூதாட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாணையம் தொடங்கப்பட்டதிலிருந்து, 100க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட சூதாட்ட தளங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் பயனர்களை சூதாட்டத்தில் பங்கேற்கத் தூண்டும் அல்லது வழிமுறை ஏற்படுத்தும் சமூக ஊடக அடிப்படையிலான சூதாட்ட வலையமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 36,284 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு டெலிகிராம் குழுக்களை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் தொடர்பான தலைப்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது. இணையவழி சூதாட்டம் / பந்தயத்தை எந்த வகையிலும் ஊக்குவிக்கும் விளம்பரங்கள் மற்றும் விளையாட தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையவழி விளையாட்டு அடிமையாதலின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகளை வெளியிடுவது போன்ற பல்வேறு விழிப்புணர்வு பணிகளை இவ்ஆணையம் மேற்கொண்டு வருகிறது என தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் முகமது நசிமுத்தின்., (ஓய்வு) தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.