அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 1வது வார்டில் உள்ள வேடர் காலனியில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகாரளித்தனர்.
மேலும், பத்து நாட்களாக குடிநீர் கிடைக்காததால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு, கேன் தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினரால் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், கொதிப்படைந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், 1வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில், நேற்று காலை 9 மணிக்கு, பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி தலைவர் பாண்டிம்மாள், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
தலைவர் பாண்டியம்மாளுடன் பேசிய அடுத்த 10 நிமிடத்தில், வேடர் காலனிக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.