எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சாமியம்மாள் (55). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது வாழ்வாதாரத்துக்காக பசுமாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது மாடுகளை ஆச்சாள்புரம் அருகே உள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் திடீரென அறுந்து மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டின் மீது விழுந்தது.
இதில் மாட்டின் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மாடு துடிதுடித்து உயிரிழந்தது. இதனால் மற்ற மாடுகளும், சாமியம்மாளும் அலறி துடித்து ஓடி உயிர் தப்பினர். தனது வாழ்வாதாரமாக இருந்த மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சாமியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.