தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் தனியார் பள்ளியில் சக மாணவியுடன் பேசியதை பார்த்த ஆசிரியர் தரகுறைவாக பேசியதால், மனம் உடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவன் எழுதிய கடிதத்துடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் காவல்துறையினர் குவிப்பு.
தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் – மணிமேகலை தம்பதியினர் ஒரே மகன் ஸ்ரீராம். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள “வேலம்மாள் போதி கேம்பஸ்” என்ற தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (30-06-2025) காலை வீட்டில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
எதுவும் புரியாத பெற்றோர்கள் மகனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவனின் இறப்பை காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து விட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று மாணவனின் அறையில் தேடிப்பார்த்த போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பள்ளி வகுப்பறையில் தனது தோழியுடன் பேசிக்கொண்டு இருந்த போது, அதனை பார்த்த 11 ஆம் வகுப்பு ஆசிரியர் “சிம்காஸ்” என்பவர் தவறாக புரிந்து கொண்டு தரக்குறைவாக பேசியதாகவும், மேலும் சக மாணவர்கள் முன்னணிலை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாக அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக மாணவர் எழுதியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவன் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் அவமானப்படுத்துவார் என நினைத்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுதாக பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர் இதனால் பள்ளியில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.