தஞ்சாவூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட திருமதி சித்ரா அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருவையாறு ஆகிய பகுதிகளில் செப்புக்கம்பிக்காக மின்சார வாரியத்தின் ஒற்றை கம்ப மின் மாற்றிகளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் திருடி சென்று விட்டார்கள்.
ஆழ்குழாய் கிணறு பாசன விவசாயிகள் குறைந்த அழுத்த (லோ- கரண்ட்) மின்சாரம் வருவதால் மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. அதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் நான்கு மின்மோட்டார்கள் இயங்கு வகையில் 3 லட்சம் செலவில் ஒற்றைக் கம்ப மின்மாற்றிகளை பல இடங்களில்அமைத்து தந்தார்கள். அதன் மூலம் விவசாயிகள் மின்மோட்டார் இயக்கி நீர் பாசனம் செய்து சாகுபடி செய்து வந்தார்கள்.
கடந்த சில மாதங்களாக மேற்படி ஒற்றைக்கம்ப மின்மாற்றிகளை உடைத்து அதில் உள்ள செப்பு கம்பி, ஆயில், அலுமினியம், இதர பொருட்களை திருடி சென்று விடுகிறார்கள்.
இதனால் மின்மோட்டார் இயங்காமல் நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நாஞ்சிக்கோட்டை அருகில் வெங்கராயன் குடிகாடு கிராமத்தில் ஒற்றைக்கம்ப மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் திருடி சென்றுள்ளார்கள்.
இது சம்பந்தமாக வல்லம் காவல் நிலையத்தில் மின்வாரிய இளநிலை உதவி பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் திருடி சென்ற யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மேலும் உடைக்கப்பட்ட ஒற்றைக்கம்ப மின் மாற்றி களில் இரும்பு பெட்டி மட்டுமே உள்ளது. எனவே உடைத்து திருடப்பட்ட அனைத்து இடங்களிலும் புதிய மின்மாற்றிகளை பொறுத்த வேண்டும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சித்ரா அவர்களிடம் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக மேற்பார்வை பொறியாளர் உறுதியளித்துள்ளார்