நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொண்டாலே பாதி குணமாகி விடுவார்கள் என செவிலியர்களுக்கு ஆலோசனை

விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2023- 24 ம் ஆண்டிற்கான 15வது நிதி குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 5 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் சி வி கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டிடப் பணிகள் குறித்த வரைபடத்தை பார்வையிட்ட அவர் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்ற அவர் அங்குள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து 26 வயதான இளம் பெண் ஒருவர் டயாலைசிஸ் சிகிச்சை பெற்றவரிடம் நலம் விசாரித்த அவர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என விவாதித்தார். தொடர்ந்து அமைச்சர் அவரது குடும்ப சூழ்நிலை அறிந்து அவருக்கு நிதி உதவி செய்தார். மேலும் அவருக்கு தற்காலிக பணி வழங்க முடியுமா என தலைமை மருத்துவர் அலுவலர் டாக்டர் சாமிநாதனிடம் கேட்டறிந்த அவர் மருத்துவமனையிலேயே தற்காலிக பணியாளராக பணிபுரிந்து கொண்டே சிகிச்சை பெறலாம், உனக்கான பணி ஆணை வழங்கப்பட்டு விட்டதாக விரைவில் குணமடைவாய் என தெரிவித்தார்.

தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட மேல் தளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்கள் செவிலியர்களை அழைத்த அமைச்சர் நோயாளிகளிடம் கனிவாக அன்பாக நடந்து கொள்ள வேண்டும். நான் ஒரு நோயாளியிடம் பேசிய போது அவர் பாதி குணமடைந்து விட்டார்.

அதுபோல நீங்களும் பேசினால் நோய் தானாகவே சரியாகிவிடும் என தெரிவித்த அவர் தலைமை மருத்துவர் அலுவலரிடம் நீங்கள் செவிலியர்களுக்கு அவ்வப்போது கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். என்னை ஒருநாள் கூப்பிடுங்கள் நான் வந்து அவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றேன் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் பானுமதி, திமுக நகர செயலாளர் தண்டபாணி, முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் தர்ம. மணிவேல், வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *