பா. வடிவேல் – அரியலூர் மாவட்ட செய்தியாளர்
அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் திறமைகளைப் பொது முன்னிலையில் கௌரவிக்கும் வகையில், மாடர்ன் கல்விக் குழுமம் சார்பில் “மாடர்ன் சாதனையாளர் முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாடர்ன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் முனைவர் சொ. பழனிவேல் அவர்கள் தலைமையேற்றார். துணைத் தலைவர் எம்.கே.ஆர். சுரேஷ் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக திரு J.சங்கர், மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் கலந்து கொண்டு, தேர்வுசெய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவித்தார்.
ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் சிறந்த பலன்கள் பெற்ற மாணவர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த நாளின் நட்சத்திரங்களாக மிளிர்ந்தனர்.
மாணவர்களின் விடாமுயற்சியும், ஆசிரியர்கள் வழங்கிய நேர்த்தியான கல்வி வழிகாட்டலும் இவ்விருதுகளைத் தக்கவாறு பெறச் செய்துள்ளன. “அரசுப் பள்ளிகளில் படித்து சாதனை படைக்க முடியும்” என்பதற்கே இது ஒரு அழுத்தமான எடுத்துக்காட்டு என பலரும் தெரிவித்தனர்.
விழாவில் மாடர்ன் கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர். விழா முழுவதும் உற்சாகமும், பாராட்டும் நிறைந்த நிலையில் அமைந்தது.