பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி உள்ளிட்ட கிராமங்களில் புதிய பேருந்து சேவைகள் மற்றும் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகர்ப்பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் இந்த சேவைகள் மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டன. புதிய சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் நேரில் வந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. சின்னப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துவக்கப்பட்ட பேருந்து சேவைகள் விவரம்:
ரெங்கசமுத்திரம்: அரியலூர் – வி.கைகாட்டி செல்லும் 017A பேருந்து ரெங்கசமுத்திரம் மற்றும் பள்ள கிருஷ்ணாபுரம் வழியாக இயக்கப்படுகிறது.
சாத்தமங்கலம்: அரியலூர் – திருமானூர் செல்லும் 08A பேருந்து, சாத்தமங்கலம் வழியே சென்று பொதுமக்களுக்கு பயன்படுகிறது.
செட்டிக்குழி: அரியலூர் – செட்டிக்குழி செல்லும் 015A பேருந்து சேவை, செட்டிக்குழி வரை நீட்டிக்கப்பட்டு மக்களிடம் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகிறது.
இவை அனைத்தும் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்தாகும். இந்த சேவைகள் மூலமாக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறையின் கும்பகோணம் நிர்வாக இயக்குநர் திரு. தசரதன், திருச்சி மண்டலம் பொது மேலாளர் திரு. சதீஸ்குமார், தொழிற்சங்க பிரதிநிதிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சேவைகள் மக்கள் நலனைக் குறிவைத்து வழங்கப்படும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.